ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சரவையில் நாளை புதன்கிழமை மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
பெரும்பாலும் நாளை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுவந்த நிலையில், அதுகுறித்து இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டிருப்பதாகவும், அமைச்சரவையில் நாளை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடி தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஒருசில அமைச்சர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் ஏனைய அமைச்சரவைக் கூட்டங்களை விடவும் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் சுமுகமாக முடிவுற்றதாக கூறப்படுகின்றது.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.