மத்திய வங்கியின் பாரிய ஊழல் மோசடியானது ரணில் விக்ரமசிங்க வகுத்த நேர்த்தியான திட்டத்தின் மூலமே இடம்பெற்றுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கி ஊழல் தொடர்பில் பிரதமரிடம் ஜனாதிபதி நேரடியாக கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கி ஊழலுடன் நாட்டின் இரகசியங்களையும் அம்பலப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்திய ஜீ.எல்.பீரிஸ் அவர் சிங்கப்பூரில் சொகுசு வாழ்க்கையினை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கிருந்து அவரை கொண்டுவரும் அதிகாரங்கள் இதுவரையிலும் இல்லை என தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ் மத்திய வங்கி ஊழலுடன் பிரதமர் நேரடியாக தொடர்பு பட்டுள்ளார் என்பதும் தற்போது வெளிப்படையாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவர் பதவியை விட்டு விலகுவதே சரியானது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.