மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய நாள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சாத்வீக போராட்டமானது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டும், மற்றும் உரிய நியமனங்கள் வழங்கப்படாததையும் கண்டித்தே கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
தொழில் உரிமை கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரினால் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
இருப்பினும் குறித்த உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ள போதிலும்ள் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு தொடர்ந்து பின்னடித்து வருகின்றன.
எமக்கான தொழில் உரிமையினை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்தி செய்யாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.