வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பல நகரங்கள் முறையான சுத்திகரிப்பின்றி மாசுபட்ட நகரங்களாக திகழ்கின்றன.
அந்த வகையில் இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளின் பல நகரங்கள் சுகாதார தன்மையில் பின்தங்கியுள்ளன.
பெரும்பாலான இந்திய நகரங்களே மாசுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை முறைக்கு பெறும் இடையூறாக திகழ்கின்றன.
அந்த வகையில் தற்போது இலங்கையின் சில நகரங்கள் மாறி வருகின்றன.
தலைநகர் கொழும்பில் அண்மைக் கால அசம்பாவிதங்கள் முறையான கழிவகற்றல் செயற்பாடுகள் இன்மையாலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு மாசுபட்ட நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து, காற்று மாசுபாடு அளவிடப்பட்டது.
முதலாவதாக மனிதனின் தலைமுடியில் 30 இல் ஒரு பங்கு அளவில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக் கூடிய PM 2.5 அளவுள்ள துகள்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
PM 2.5 அளவுள்ள துகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதாகவும், எனவே இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அந்த வகை துகள் நுரையீரல் மற்றும் இரத்தக் குழாய்களுக்குள் நுழையும் திறன் பெற்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) PM 2.5 தரவை பார்த்தால் ஈரானிய நகரமான ஷபோல் முதலிடம் பிடித்துள்ளது.
ஒரு லட்சத்துக்கும் அதிமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் ஈரானின் கிழக்காக ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
அங்கு வருடத்திற்கு சுமார் 120 நாட்கள் மணல் புயல் வீசும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டின் ஷபோல் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் குவாலியர் மற்றும் அலகாபாத் நகரங்கள் 2வது, 3 வது இடங்களை பிடித்துள்ளன.
சீனாவின் பெய்ஜிங் மற்றும் புது டெல்லியை விட ஈரான் நாட்டின் ஷபோல் நகரம் பெரும் மாசுபட்ட தன்மையைக் கொண்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கையின் தலைநகரான கொழும்பு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியலில் 36 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கொழும்பு கோட்டை உட்பட முக்கிய பிரதேசங்களில் வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் நீர் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாமல் அநாமத்தாக விடப்படுவதனால் அவை நாளடைவில் இயற்கை அனர்த்தங்களுக்கும் வழிவகுக்கின்றது.
அத்துடன் வெயில் காலங்களில் புழுதி வயல்களாக காணப்படும் பாதைகளில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உலக சுகாதார தின சர்வதேச வைபவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ம் திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெறவுள்ளது.
சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதார தின சர்வதேச வைபவம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்றுக் காலை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
குறித்த நிகழ்வில், உலக சுகாதா ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பெட்ரொஸ் ஆதனம் கெப்ரேசஸ் மற்றும் அந்த ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பூனம் வெற்றிபால் சிங் ஆகியோர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.