பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவி விலகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரின் பதவி காலம் தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்வரை இருந்தது.
எனினும், தமது பவிகாலத்தை மார்ச் மாதத்துடன் நிறைவுசெய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்படவில்லை.
தற்போது பிரித்தானியாவுக்கான உதவி உயர்ஸ்தானிகராக செயற்படுபவர் பதில் உயர்ஸ்தானிகராக செயற்படுவார் என்றும் வெளிவிகாகர அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்த்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோ இன்று பிற்பகல் இலங்கைக்கு வரவுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியால் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்களை நோக்கி தமது கழுத்தை காண்பித்து சைகை செய்தமை தொடர்பில், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர், அவரை கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின்பேரில் அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில், பிரிகேடியர் ப்ரியங்க பெர்னாண்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரக சேவை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அவரை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.