சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ள கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ஹேமந்த அதிகாரி, 3 மணிநேரம் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில், அவர் இந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சார்பில் அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்னிலையானார்.
குறித்த படுகொலை தொடர்பில் தமது தரப்பினர், நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கத் தயார் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த வாக்குமூலத்தை வழங்க நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குறித்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, அவரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.