தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு முன்னால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள தேசப்பற்றுள்ள இலங்கையர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் பல இலங்கையர்கள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது, குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை புலிகளின் கொடிகளை ஏந்தியவாறு, சிலர் போராட்ட இடத்தில் கூட அங்கு சிறு பதற்றம் தோற்றம் பெற்றுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கடந்த 4ஆம் திகதி புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கழுத்தை அறுத்துவிடுவதைப் போல சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கவை இலங்கை அரசாங்கம் திருப்பியழைத்து விசாரணை நடத்த வேண்டுமென பிரித்தானிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலர் வலியுறுத்தியதை அடுத்து, நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.