மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி அவர்களின் விளையாட்டுத் திறன்களை விருத்தி செய்து அவர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்திற்காக மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகமும், புலம்பெயர்ந்து வாழும் அக்கழக உறுப்பினர்களும் எடுத்து வந்த தொடர் முயற்சியின் பயனாக இது சாத்தியமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, கோட்டமுனை விளையாட்டு கழக தலைவர் பி. சடாச்சரராஜா தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் பந்துல வர்ணகுலசூரிய, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் சந்தன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் எஸ். ரஞ்சன் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே. பாஸ்கரன் மற்றும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.