வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு மாவட்டமாகும். தற்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், மாவட்ட செயலக வளாகத்திலும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான வேலைகள் புதிதாக வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் சோமரட்ன விதான தலைமையில் இரகசியமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை, வடக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வவுனியாவில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.