நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் முன்னேற்றகரமாக ஒன்றையும் செய்யவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்றையநாள் யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜ.நா. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தில் 1 வருட நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை எனவும் ஆகவே மாற்று வழிகளை கையாளுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போர்க் குற்றங்களை புரிந்தவர்கள் எனக் கூறப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதி மன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதும் இரண்டு மாற்று வழிகளாக முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக ஜ.நா. வரை செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தாம் கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தள்ளமயும் குறிப்பிடத்தக்கது.