நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா நியமிக்கப்படுவார் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருப்பார் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது சரத் பொன்சேகா சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்த ராஜித சேனாரத்ன
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியில் இருப்பவர் முன்னோக்கி செல்லும் ஒருவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக இரட்டை வேடம் போடுபவராக இருக்க கூடாது என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.