நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் இன்னும் மும்பைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வந்துவிட்ட போதிலும், துபாய் போலீசார் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணையை இன்னும் முடிக்காததால் ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு துபாய் நேரப்படி 10.40 மணிக்கு துபாய் போலீசார் போனிகபூரை வரவழைத்து விசாரணை செய்தனர்.
குறிப்பாக துபாயில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு மும்பை திரும்பிய போனி கபூர், திடீரென ஏன் மீண்டும் துபாய் சென்றார் என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், ஸ்ரீதேவி தங்கியிருந்த நட்சத்திர கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் துபாய் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவரிடம் முழுமையான விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்த பின், ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.