நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாடு அவசியம் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான ஜி-24 நாடுகளின் தொழில்நுட்பக்குழுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் உதவி செய்வதற்காக உலக வங்கியும், மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கடந்த ஒக்டோபர் மாதம் கடனை சமநிலையில் பேணும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர
குறித்த திட்டமானது இந்தவருடத்தின் நடுப்பகுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நிதிசார் ஆபத்துக்களை குறைக்கும் வல்லமை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இரண்டு நாட்கள் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜி-24 குழும நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் உட்பட 45ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.