நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில், சான்ட்னர் 63 ஓட்டங்களையும் குப்தில் 50 ஓட்டங்களையும் கிறான்ட் ஹோம்ப் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 224 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து 37.5 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்புடன் ஓட்ட இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் 63 ஓட்டங்களையும் இயன் மோர்கன் 62 மற்றும் பேர்ஸ்டோவ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.