சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரிய படைகள் நடத்திவரும், கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிர் திசையில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற அதே அநீதி சிரியாவிலும் இடம்பெற்று வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.