நாட்டில் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி செயலகத்தால் நேற்றையநாள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவில் ஜெயதீபா புன்னியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி ஏ. பீரிஸ், சிரியானி நிமல்கா பெர்னாண்டோ, மிரக் ரஹீம், சோமரிசி கே லியனகே மற்றும் கணபதிபிள்ளை வேந்தன் ஆகியோர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதிக்காக குறித்த பிரதிநிதிகளின் நியமனம் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தை நிறுவுவதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு விட்டத்தில் 1.3 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டபோதும், குறித்த பணியகம் தற்போதே நிறுவப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு வருடத்துக்கும் மேலாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.