இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு உயர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு 15 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் பிரகாரம், ரவிச்சந்திரனுக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பிணையில் செல்வதற்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சொத்துக்களைப் பார்வையிடவும், பதிவுத்துறை அலுவலகம் செல்லவும், மீனாட்சியம்மன் கோவில் செல்லவும் ரவிச்சந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.