ஐரோப்பிய யூனியனின் துப்பாக்கி விதிகளைப்போல் சுவிட்சர்லாந்திலும் கடுமையான விதிகளை கொண்டு வருவதற்கான மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்போதிலிருந்து 2019ஆம் ஆண்டின் கடைசி வரை துப்பாக்கி விதிகள் கடுமையாக்கப்படும்.
ஐரோப்பிய யூனியனின் துப்பாக்கி விதிகள், ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான துப்பாக்கிகளை எளிதில் வாங்க இயலாத வகையில் கடுமையானவையாக உள்ளன.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும் Schengen ஒப்பந்தத்தின் உறுப்பினராக உள்ளது. எனவே Schengen ஒப்பந்தத்தின்படி அதன் சட்டங்களும் மாற்றியமைக்கப்படாவிட்டால் அதன் உறுப்பினர் அந்தஸ்தை இழக்க நேரிடும்.
விதிகள் கடுமையாக்கப்படும் என்றாலும் சில விதி விலக்குகளும் உள்ளன, அதாவது ராணுவத்தில் பணி செய்தவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் தங்கள் துப்பாக்கிகளைத் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் 20 Gauge shot guns எனப்படும் துப்பாக்கிகளையும் வைத்துக்கொள்வதற்கு தடையில்லை.
எப்படியாயினும் இந்த மசோதா பிரச்சினைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தும் அமைப்புகள் இதனால் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்திலும் இந்த மசோதாவிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வலது சாரியினர் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இடது சாரியினர் துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கின்றனர்.