செயலிகளை உருவாக்கும் பொறியாளர்களை ஏமாற்றும் விதத்தில் வர்த்தகம் செய்வதாக ஆப்பிள் மற்றும் கூகுள் மீது பாரீஸின் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார்.
செயலிகளை (Apps) உருவாக்குபவர்கள் அவற்றை ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு விற்பனை செய்யும்போது அப்ளிகேஷனின் தரவுகள் சேகரிக்கப்படும் என்றும், இருவரும் இந்த விதிமுறைகளுக்கு ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்றும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
இந்த கட்டுப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் எங்கள் பயன்பாட்டின் டெவலப்பர்களை இப்படி நடத்தக்கூடாது என்று ப்ருனோ தெரிவித்துள்ளார். இதற்காக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மீது பல மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.