எந்த சாதனைக்கும் வயது ஒரு தடையாக இருக்காது என்பது, பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விளையாட்டில் வயது ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதையும் மீறி, ஒரு சிலர் சாதனைகளைப் புரிந்து வருகிறது.
அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இணைந்துள்ளார்.
இரானி கோப்பை கிரிக்கெட்டில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்து வரும் விதர்பா அணி, இரண்டாம் நாள் ஆட்ட இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு, 598 ரன்கள் குவித்துள்ளது.
இதில், மும்பையைச் சேர்ந்த, விதர்பா அணிக்காக விளையாடும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், ஆட்டமிழக்காமல், 285 ரன்கள் குவித்துள்ளார்.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அனுபவமிக்க ரவிசந்திரன் அஸ்வின், இளம் வீரர்கள் என, யார் பந்து வீசினாலும், ஜாபரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்ததுடன், அவருக்கு பந்து வீசிய அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோரும் சதம் அடித்தனர்.
அஸ்வின் 43 ஓவர்களில், 123 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜெயந்த் யாதவ் 38 ஓவர்களில் 149 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று வந்த 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பார்த்திவ் ஷா போன்ற இளம் வீரர்கள், ஜாபரின் ஆட்டத்தை பார்த்து வியந்தனர்.
வாசிம் ஜாபர், 18 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக அறிமுகமாகமானபோது, பார்த்திவ் ஷா, மூன்று மாதக் குழந்தை.
ஆனாலும், இளம் வீரர்களுக்கு இணையாக, 40 வயதிலும், தொடர்ந்து நீண்ட நேரம் மைதானத்தில் நிற்பதுடன், அதிரடி ஆட்டத்தையும் காட்டினார் வாசிம் ஜாபர்.
ஓபனிங் பேட்ஸ்மேனான ஜாபர், இந்திய அணிக்காக 31 டெஸ்டில் விளையாடி 1944 ரன்களை எடுத்துள்ளார்.
அதிகப்பட்ச ரன்கள் 212. இதில் 5 சதங்களும் 11 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட்டில் இரண்டாயிரமாவது வருடம் தென்னப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய ஜாபர், கடைசியாக ஆடியதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான்.
2008-ல் கான்பூரில் நடந்த டெஸ்ட்தான் ஜாபர் இந்தியாவுக்கு ஆடிய கடைசி டெஸ்ட்.
இந்திய அணியில் அவர் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும் முதல் தரப்போட்டியில் அவர் முக்கியமான வீரர்.
1996-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் ஜாபருக்கு இப்போது வயது 40. இருந்தும் அவரது ஃபார்மும் பிட்னஸும் வியக்க வைக்கிறது என்கிறார்கள், கிரிக்கெட் விமர்சகர்கள்.
இளம் வீரர்களுக்கு இணையாக ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற அவரது தாகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அவர் அணியில் இருந்தால் இளம் வீரர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.