அவுஸ்திரேலியாவில் நாடுகடத்தப் படவிருந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தல் இறுதி நொடியில் இரத்து செய்ய அந்நாட்டு மாணவர்கள் இறுதி நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் என அனைவரையும் அவர்களது விசா காலம் முடிவடைந்தமையால் கடந்த வாரம் Biloela, Queensland பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மெல்போர்ன் தடுப்பு மையத்தில் அவர்களை தங்க வைப்பதற்கு எல்லைப் படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த குடும்பத்தை நாடு கடத்த விமானத்தில் ஏற்றப்பட்ட போதும், இறுதி நொடியில் நாடுகடத்தல் தவிர்க்கப்பட்டு. விமானத்திலிருந்து இறக்கப்பட்ட ஆச்சர்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம், குறித்த தமிழ் குடும்பத்தின் நாடு கடத்தலுக்கு எதிராக அவுஸ்திரேலியா. மெல்போர்னில் உள்ள உள்நாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு முன்னால் மாணவர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய நாடு கடத்தப்படவிருந்த குறித்த தமிழ்க் குடும்பத்தின் நாடு கடத்தல் இறுதி நொடியில் இரத்து செய்யப்பட்டு தற்காலிமாக அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த இலங்கை தமிழ்க் குடும்பத்திற்கு ஆதரவாக இதுவரையில் 85000 அவுஸ்திரேலியர்கள் மனு ஒன்றில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.