யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போரட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுத்தராத எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனவும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்திறகு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணம் பிரதான வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மற்றும் காணாமல் போனோர் சார்பில் சில உறுப்பினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க மறுத்திருந்தார்.
இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் வாக்குகளை பெற்று அரசியலில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க மறுப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாய் ஒருவர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தமிழ் தலைமைகள் தீர்வை வழங்க மறுக்கு பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் அலுவகங்களும் முற்றுக்கையிடப்படும் என காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.