ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மஹிந்த தரப்பால் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியினர் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியும் உள்ளனர். இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதாக, மைத்ரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
பிரதமர் ரணிலுக்கு எதிராக 14 விடயங்களை முன்வைத்து மஹிந்த அணியினரால் தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அதில் கையெழுத்திடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறினார்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் தமது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக் குறிப்பிட்ட கடிதமொன்றையும் கட்சியின் தலைவரான ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஜயசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியை கைப்பற்றியதை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றுவதற்கும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த முயற்சி பலனளிக்காததை அடுத்து தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த முயற்சிகளும் தோல்வியை தழுவியதை அடுத்து தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு தற்காலிகமாக இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போது ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.