மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு விசுவாசமானவர் என கருதப்படும் அந்நாட்டு ஜனாதிபதி ஹிடின் க்யூ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மியன்மார் ஜனாதிபதி அலவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனதிபதியாக பதவியேற்ற அவர் தமது பொறுப்புகளிலிருந்து விலகி ஓய்வு எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்னும் 7 நாட்களில் அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதுவரை அந்நாட்டு அரசமைப்புச் சட்டப்படி, துணை ஜனாதிபதி மியன் சுவீ அந்தப் பொறுப்பை ஏற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு, விசுவாசியான ஹிடின் க்யூ (வயது 72), கடந்த சில நாட்களாக இதயக் கோளாறால் அவதிப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், கடந்த 6 மாத காலமாக அங்கு நிலவும் ரோஹீயா முஸ்லிம் அகதிகள் விவகாரம் தொடர்பில், சர்வதேச அழுத்தங்களுக்கு மியன்மார் முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.