ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கு இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது ஆரம்பத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தாமதம் காணப்படுவது தொடர்பாக சட்டத்தரணி ஷாலினி மன்றை வினவியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதிவான், இவ் வழக்கின் விசாரணையை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாம் அனுப்பியுள்ளதாகவும் விரைவில் விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ள நிலையில் விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த வருடம் தை மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணித் தாயொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த ஒருவருடங்களாக குறித்த விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், குறித்த கொலை தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு குறித்த வழக்கு விசாரணைகளை மாற்றுமாறு கடந்த ஒருவருடமாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிவந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது.
எனினும் குற்றப்புலனாய்வின் விசாரணையில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ளது.