சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சோஷலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள், சிரியாவின் மீது குண்டு போடுவதை நிறுத்த வேண்டும், யுத்தவெறியர்களை சிரியாவில் இருந்து விரட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததுடன்,
கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய், யுத்தத்திற்கு செலவு செய்யாதே போன்ற கோரிக்கை முழக்கங்களையும் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே குறித்த பகுதியில் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குர்திஸ் இன மக்களும், அகதிகள் உரிமைகள் அமைப்பின் இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர்.
அதே போன்று அகதிகள் உரிமைகள் அமைப்பும் குர்திஸ் இன மக்களின் போராட்டத்திற்கு பரஸ்பர ஆதரவை வழங்கியிருந்தனர்.
Afrin நகர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான துருக்கி அரசின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்,
துருக்கி அரசிற்கு இங்கிலாந்து ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குர்திஸ் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் 6.5 கோடிக்கும் மேற்பட்ட அகதிகள் உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடமில்லாமலும் அவதியடைந்து வருவதாகவும்,
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தமது சுயலாபத்திற்காக ஆயுதங்களை விற்பனை செய்வதனால்தான் உலகெங்கும் யுத்தங்களும், அதன் தொடர்ச்சியாக அகதிகளும் உருவாகி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.