யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிழக்கு மாகாணம் மூதூரில் தமது பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பொறுப்புக் கூறவில்லையென அக்சன் ஃபம் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கண்டனம் வெளியிட்ட அக்சன் ஃபம் அமைப்பு, படுகொலை இடம்பெற்று பதினொரு வருடங்கள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலதிக தாமதம் இன்றிச் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவேண்டுமெனவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அக்சன் ஃபம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்படாவிட்டால், இலங்கையில் குற்றம் புரிந்தோருக்கு எதிராக சர்வதேச நாடுகளில் வழக்குத் தொடர்வதற்கு வழிவகுக்கும் சர்வதேச நியாயாதிக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு அக்சன் ஃபம் நிறுவனம் மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளது.
அமரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கிழக்கு மாகாணம் மூாரில் அக்சன் ஃபம் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் படையினரால் அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.