இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போா்க்குற்றங்கள், மனித உாிமை மீறல்கள் தெடர்பாக, சர்வதேச குற்றவியல் நடவடிக்கைக்கு இலங்கையை உட்படுத்துவது குறித்து சர்வதேச சமுகம் தீர்மானம் எடுக்க வேண்டுமென சர்வதேச நாடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சா்வதேச தரத்துக்கு அமைவான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இன்று வியாழக்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை மனித உரிமைச் சபையில் இலங்கையும் கூட்டாக முன்வைத்து நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தாமதப்படுத்துவதாகவும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான பொது விவாதம் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. நேற்று புதன்கிழமை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதும் நேரம் போதாமை காரணமாக பொது விவாதம் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது.
ஒஸ்ரேலியா, பெல்ஜியம், கனடா, நோர்வே, அயர்லண்ட், நெதர்லண்ட் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும், மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை, பசுமைத் தாயகம் உட்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றினார்கள்.
இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பொதுவாக வரவேற்ற பிரதிநிதிகள், அந்த நடவடிக்கைகள் மெதுவாக இடம்பெறுவதாகவும், அவை போதுமானவை அல்லவெனவும் குற்றம் சுமத்தினார்கள். உறுதியளிக்கப்பட்ட நான்கு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச தராதரங்களுக்கு அமைவான சட்டம் ஒன்று நடைமுறைக்குக் கொண்டுவரப்படவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
இலங்கை – மனித உரிமைச் சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வேகம் மிகக் குறைவாக இருப்பது ஏமாற்றமளிப்பதாக தீர்மானத்தைச் சமர்ப்பித்த அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மென்ரநீக்றோ ஆகிய நாடுகள் நேற்று புதன்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.