அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் – ஏ.ஆர்.ரகுமான் இணையவிருக்கும் நிலையில், மூன்று பேரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேலைக்காரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு வித்தியாசமான படமாகவும் அமைந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் இருவரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து படம் குறித்து ஆலோசித்துள்ளனர். முன்று பேரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், இந்த முறை விஞ்ஞானி தொடர்பான கதையை இயக்குகிறார். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானி கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். எனவே, இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ‘கெட்-அப்’-க்கு மாறுகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக கூறப்படுகிறது.