இளைஞர்களுக்கு இடங்கொடுத்துவிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு விடுத்திருக்கிறது.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் எஸ்.ஆர்.எம். விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 25 வருடகாலமாக கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வருகிறார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்த தலைவராக தென்னாசிய வலயத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரபல்யம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
யார் என்னதான் தெரிவித்தாலும் ஒருசிலர் ரணில் விக்கிரமசிங்கவை இன்னும் பாதுகாத்து வருவதாக தெரிவித்த எஸ்.ஆர்.எம். விக்கிரமசிங்க, எவ்வாறாயினும் கட்சித் தலைமைப் பீடத்திலிருந்து விலகும் தருணம் பிரதமருக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சி முகங்கொடுத்த தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்தும் தலைவர் பதவியில் அவர்நீடித்தால் அதற்கெதிராக மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார்.