இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சங்கானையில் ஆலயக் குருக்களை கொலை செய்து அவரது பிள்ளைகளை காயப்படுத்தியமை, நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்தத் தண்டனையை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
எனினும் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் காலக்கட்டத்தில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
இதுவொரு இராணுவ பழிவாங்கல் என விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் குற்றம் சுமத்த வந்துவிடுவார்கள். எனினும் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதனை நீதிபதி இளஞ்செழியன் உறுதி செய்துள்ளார் என தென்னிலங்கை மக்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியன் அநீதியான தீர்ப்பை ஒருபோதும் வழங்கமாட்டார். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டத்தில் பயனில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மரண தண்டனை விதித்தால் மாத்திரம் போதாது சிறையில் உணவளிப்பதற்கு பதிலாக தூக்கில் போடுங்கள் என பலர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பான தீர்ப்பு அவ்வாறு தான் நீதிபதி ஒருவர் செயற்பட வேண்டும். இந்த நீதிபதி இனவாதம் இன்றி சரியாக தீர்ப்பு வழங்கும் ஒருவர். இதற்கு முன்னரும் பலமுறை நிரூபித்துள்ளார். இதனையும் இராணுவத்தினர் என்ற அடிப்படையின்றி குற்றத்திற்கு தண்டனை வழங்கியிருக்கலாம் என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிபதி நீங்கள் எங்களுக்கு பெறுமதியானவர். உங்களுக்கு அனைத்து சக்திகளும் கிடைக்க வேண்டும். தவறு செய்திருந்தால் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பது முக்கியம் அல்ல. தராதரம் பாரால் தண்டனை வழங்க வேண்டும். அது அனைவருக்கும் சமமே. உங்களை போன்ற ஒருவர் நாட்டிற்கு அவசியமான காலம் இதுவாகும் என தென்னிலங்கை மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.