மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக காரைதீவில் இருந்து இன்று(24-03-2018) காலை உழவு இயந்திரத்தினை ஓட்டிச்சென்றவா் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் மதகு ஒன்றின் கீழ் வீழ்ந்து உயிரிழந்துள்ளாா்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் யோகேஸ்வரன் என்ற 51 வயதுடைய உழவு இயந்திர சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…..
காரைதீவு வடிவேல் வீதியில் வசித்து வரும் இவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு 40க்கும் மேற்பட்ட எருமைமாடுகள் வைத்திருப்பதாகவும், அதற்காக வேண்டி வைக்கோல் ஏற்றுவதற்கே தனது வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டதாகவும் உறவினா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் அட்டப்பள்ளம் பெரிய பால வீதிக்கு அண்மையில் உள்ள கோழியன்காட்டு வட்டைக்குச்செல்லும் வீதியில் உள்ள மதிலை முட்டி மோதிய பின்னரே மதகு ஒன்றின் கீழே உழவு இயந்திரம் தலைகீழாக குடைசாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மரணமடைந்தவருடைய உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.