இலங்கையில் நேற்று நள்ளிரவு திடீரென அதிகரிக்கப்பட்ட லங்கா ஐ.ஓ.சி நிறுவன பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலையைப் பாதிக்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்து அமைந்துள்ளது.
அதேபோல் எக்ஸ்ரா ப்ரிமியம் யூரோ 3, ரக பெற்றோல் 123 ரூபாவில் இருந்து 128 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், எக்ஸ்ரா மைல் ரக டீசல் 99 ரூவாவில் இருந்து 102 ரூபாவாக கூட்டப்பட்டுள்ளது.
ஆனாலும், எக்ஸ்ரா ப்ரிமியம் 95 ரக பெற்றோல் மற்றும் லங்கா சுப்பர் டீசல் என்பவற்றின் விலைகளில் எந்த விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.