உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு போக்குக்காட்டி இழுத்தடிப்பதாகவும் அமைந்திருப்பதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான மேல்முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், “மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டும், இதுவரை நேரம் ஒதுக்காமல் புறக்கணித்துவருகிறார்.
இதன்பின்னர், மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூட்டிய அதிகாரிகள் மட்டக் கூட்டத்தில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதற்கான “திட்டம்” தயாரிக்குமாறு கூறியுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
முன்னதாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம்வ ரையறுத்துள்ள காலக் கெடுவுக்குள் அமைப்பது சாத்தியமில்லை” என செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதை மறந்துவிடமுடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு போக்குக்காட்டி இழுத்தடிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டியது அவசியமாகும். தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.