ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான கனிதரன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழர் சமூக முன்னேற்ற நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய சிவன் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதரவாகியுள்ள இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் உட்பட பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையில் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளான கனிதரன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது தாய் யோகராணி இறந்த பின்பு கனிதரன் மற்றும் சங்கீதா ஆகியோர் பெற்றோர் இன்றி நிர்க்கதியாகியுள்ளதை கணேஸ்வரன் வேலாயுதம் வடமாகாண ஆளுநரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
அத்துடன் ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருமாறும் சிவன் பவுண்டேசன் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைக் கேட்டறிந்த வட மாகாண ஆளுநர், ஜனாதிபதி தற்போது வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இரு பிள்ளைகளும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.