இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சாலை விபத்தில் காயமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் டேராடூனில் இருந்து டெல்லியில் தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் ஷமி காயமடைந்தார். தலையில் அடிப்பட்ட ஷமிக்கு சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்தாண்டின் தொடக்கம் ஷமிக்கு அவ்வளவு இனிமையாக அமையவில்லை.
ஷமியின் மனைவி ஹசின் ஜஹானின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டின் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்திய அணியின் வீரர்களுக்கான இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை.
இது தாற்காலிக முடிவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது.
முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்துள்ளது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இதனால் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, என் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த பத்து, பதினைந்து நாட்களாக மனரீதியான டார்ச்சரை அனுபவித்து வந்தேன். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.