அமெரிக்க தொழில்களின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடுகிறது, அமெரிக்க தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொள்கிறது என்பது சீனா மீது அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு ஆகும். இந்த குற்றச்சாட்டை சீனா மறுக்கிறது.
ஆனால் அமெரிக்காவோ 1974-ம் ஆண்டின் அமெரிக்க வர்த்தக சட்டத்தின்கீழ் 8 மாத காலம் விசாரணை ஒன்றை நடத்தியது. இதில், அமெரிக்க முதலீட்டாளர்களை முக்கிய தொழில் நுட்பங்களை சீன கம்பெனிகளுக்கு மாற்ற வேண்டும் என்று சீனா நிர்ப்பந்திக்கிறது, இதன்மூலம் சீனா நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது என தெரிய வந்தது.
இந்த நிலையில், சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதில் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யக்கூடிய அலுமினியத்துக்கு 25 சதவீதமும், உருக்குக்கு 10 சதவீதமும் வரி விதிக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு வரியை 60 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடி) உயர்த்த முடிவு எடுத்து அதையும் அறிவித்தார்.
அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
உடனே அமெரிக்காவை பழிவாங்குகிற விதமாக சீனாவும் பதிலடியில் இறங்கியது. பழம், ஒயின் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 கோடி) கூடுதல் வரிகள் விதிக்க சீனா முடிவு எடுத்தது. இந்த வர்த்தக போர், நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.
இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுசினை சீன அதிபர் ஜின் பிங்குக்கு நெருக்கமான துணைப்பிரதமர் லியு ஹீ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர், அறிவுசார் சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி, வர்த்தக விதிகளை அமெரிக்கா மீறி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுபற்றி ஸ்டீவன் மனுசினுடன் லியு ஹீ பேசும்போது, “நீங்கள் (அமெரிக்கா) நடத்திய விசாரணை அறிக்கை, சர்வதேச வர்த்தக சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். இது சீன நலன்களுக்கோ, அமெரிக்க நலன்களுக்கோ அல்லது உலக நலன்களுக்கோ பலன் அளிக்காது” என்று குறிப்பிட்டார். மேலும், “சீனா தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ளும். அதற்கு ஏற்கனவே தயாராக உள்ளோம். அதற்கான பலம் எங்களிடம் உண்டு” என்றும் கூறினார்.
இதற்கு இடையே, சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை, அமெரிக்கா மீதான சீனாவின் நடவடிக்கை குறித்து தலையங்க கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த கட்டுரையில், “ இது பழிவாங்கும் படலத்தின் ஆரம்பம்தான். சீனாவின் எதிர் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது. சோயாபீன்ஸ் மற்றும் அமெரிக்க வேளாண் உற்பத்தி பொருட்கள் மீது அடுத்து குறி வைப்போம்” என கூறப்பட்டு உள்ளது.