இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தாலும்,தற்போதைக்கு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாடுபூராகவும் அமைக்கப்பட்டிருப்பதால், எரிபொருள் நிரப்புவதற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வருடாந்தம் ஜுலை மாதம் மேற்கொள்ளப்படும் பேரூந்து கட்டண திருத்தத்தின் போது, ஐ.ஓ.சி.யின் 5 ரூபா விலை அதிகரிப்பானது ஏதாவதொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விலை அதிகரிப்பானது தமது தொழிற்சங்கம் எதிர்நோக்கி வரும் பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்க தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆளும் தேசிய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கை காரணமாக நாட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.