மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நீதியைப் பெற்றுத் தராது தம்மை கைவிட்டு விட்டதாக வவுனியா மாவட்ட தொண்டராசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம் ஜுன் மாதம் நடைபெற்றிருந்தன.
இந்த தேர்விற்கு ஆயிரத்து 46 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, அந்த நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருந்தது.
எனினும், வடமாகாண கல்வி அமைச்சு 182 பேரே தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்து அவர்களது பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது.
நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தின் போதும், பல இன்னல்களுக்கு மத்தியில் கடமையாற்றிய தாம், பல நேர்முகத் தேர்வுகளில் தோற்றியிருந்த போதும்,
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீண்டகாலம் கற்பித்து வரும் தம்மிடம் கோரப்பட்ட தகமைகள், ஆவணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட தொண்டராசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் 25 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அபிராமி பாலமுரளி, வடமாகாண சிரேஸ்ட உதவிச் செயலாளர் ஏ.சாந்தசீலன் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து தமக்கான நீதியை பெற்றுத்தர தவறியுள்ளதாகவும் வவுனியா மாவட்ட தொண்டராசியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.