கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்த்தாங்கி அமைந்திருந்த நாற்பது பேர்ச் காணியில் புதிதாக கட்டமொன்றை அமைக்கும் நோக்கில், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் குறித்த நீர்த்தாங்கியை உடைத்து அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நிறுவப்பட்டிருந்த இந்நீர்த்தாங்கி, யுத்த காலத்தில் இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கியானது, யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கி மற்றும் நீர்தாங்கி அமைந்துள்ள காணி என்பன ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி அவை விடுவிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
யுத்தத்தின் சான்றாக காணப்படும் இந்நீர்த்தாங்கியை தென்னிலங்கை மக்களும் வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்த நிலையில் தற்போது அதனை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.