பல்வேறு குடும்பச் சூழ்நிலைகாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்களை மீட்க தாம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஐநா உதவவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருந்தது பற்றி ஜெனீவாவில் நடைபெற்ற பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் கேட்டபோது கஜேந்திரகுமார் அளித்த பதில் வருமாறு:
Father MX கருணாகரனால் ( இலங்கை இராணுவத்தால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர் ) ஸ்தாபிக்கப்பட்ட வட கிழக்கிற்கான மனித உரிமைச் செயலகத்தில் நான் உறுப்பினராக இருந்தபோது ,
பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளின் காரணமாகப் புலிகள் இயக்கத்தில் இணைந்த 16 வயதிற்கும் குறைந்த 126 பேருக்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டு அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து கல்வி புகட்ட மற்றும் சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.
அதுபற்றி நானும் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் சந்திரநேருவும் புலிகளுடன் பேசினோம். அதற்கு புலிகளின் தலைமையும் ஒத்துக்கொண்டது.
அதனடிப்படையில் ஐநாவுடன் அந்த விஷயத்தை பற்றிப் பேசினோம் அப்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனும் ஜெனீவாவில் இருந்தார்.
விடுதலைப்புலிகள் வடகிழக்கில் எமது மனித உரிமைச் செயலகத்தை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் சிறுவர்களின் புனர்வாழ்வுக்கு ஐநா நிதியுதவி வழங்குவதாய் கூறினார்கள் அதற்கு புலிகளும் ஒத்துக்கொண்டனர்.
ஆனால் அதை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்ததுடன் அது தமிழீழத் தனிநாட்டுக்கான எதிர்கால மனித உரிமைகள் செயலகத்தை அமைக்கும் பணி என்றுகூறித் தடுத்தது.
எனவே ஐநா உதவி செய்யவில்லை.
இங்கே புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருந்தார்கள் என்று கூறும் அரசோ அல்லது ஐநாவோ அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நாம் முயன்றபோதும் உதவி செய்யவில்லை.
அவர்களுக்கு உண்மையில் சிறுவர்கள் பற்றி அக்கறையும் இருக்கவில்லை.
போர் முடிந்து 9 வருடமாகியும் அவர்களின் மேம்பாட்டிற்காய் அரசு எதையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.