தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அதே நிகழ்ச்சியில் தற்போது கலக்கி வரும் அசாரின் நடிப்பில் வெளிவந்துள்ளத படம் தான் ஏண்டா தலையில எண்ண வெக்கல. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் இவர்களும் இணைந்தார்களா? பார்ப்போம்.
கதைக்களம்
அசார் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலை தேடி வருகின்றார். எந்த கம்பெனியிலும் வேலை கிடைக்கவில்லை, ஆனால் இண்டர்வியூ சென்ற இடத்தில் சஞ்சிதா ஷெட்டியை பார்த்தவுடன் காதலில் விழுகின்றார்.
அவர் பின்னாடியே சுற்றி எப்படியோ ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். அந்த நேரத்தில் தான் அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது.
ஒரு நாள் தெரியாமல் தலையில் எண்ணெய் வைக்காமல் செல்லும் அசார், அதன் விளைவாக எமனின் ஆட்டத்தில் சிக்குகின்றார். “நீ உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த 4 விஷயத்தை செய்ய வேண்டும்” என்று எமன் டாஸ்க் கொடுக்க அதில் அசார் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அசார் வெள்ளித்திரைக்கு நல்ல வரவேற்பு தான், சிவகார்த்திகேயனை ரோல் மாடலாக கொண்டு வந்துள்ளார் போல, பல காட்சிகளில் அவரை போலவே நடிக்கின்றார். ஆள் பார்க்கவும் சிவகார்த்திகேயன் போலவே இருக்கின்றார். அதிலும் இரண்டாம் பாதியில் தன் வாழ்க்கைக்காக ஓடும் இடத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.
விக்னேஷ் கார்த்திக் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வந்ததால் என்னமோ படம் முழுவதும் கலக்கப்போவது யாரு போட்டியாளர்கள் அங்கும் இங்கும் வந்து செல்கின்றனர். சிங்கப்பூர் தீபன் அசார் கூடவே படம் முழுவதும் வருகின்றார்.
ஆனால், முதல் பாதியில் மிகவும் பொறுமையை சோதித்துவிட்டனர். அட சிரிக்க வைங்கப்பா, இல்லையென்றால் விடுங்கப்பா என்ற ஸ்டேஜுக்கு செல்கின்றது படம். ஒரு வழியாக இடைவேளையில் தான் கதைக்குள் செல்கின்றனர்.
அதன் பிறகும் பெரிதாக காமெடி இல்லையென்றாலும் முதல் பாதி அளவிற்கு மோசம் இல்லை. அதிலும் யோகி பாபு வரும் 10 நிமிடம் சிரிப்பு சத்தம் அடங்க சில நொடி ஆகின்றது. இதை தாண்டி டாஸ்க் காட்சிகள் தவிர படத்தில் எந்த ஒரு காட்சியும் பெரிதும் ஈர்க்கவில்லை.
ரகுமானின் தங்கை ரெஹானே நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைக்க வந்துள்ளார். படத்தில் ஒரு டூயட், ஒரு மாண்டேஜ் பாடல் போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல. அதுவும் நல்லது தான், ஒளிப்பதிவு சிறிய பட்ஜெட் படம் என்றாலும் முடிந்த அளவிற்கு நன்றாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டாஸ்க் காட்சிகள், அதிலும் யோகி பாபு வரும் 10 நிமிடம்.
பல்ப்ஸ்
நல்ல சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்க வேண்டிய திரைக்கதையில் முதல் பாதி முழுவதும் காதலை வைத்து பொறுமையை சோதித்துள்ளனர்.
மொத்தத்தில் படத்தில் வரும் வசனம் போலவே நல்ல கதையை வித்தியாசமாக சொன்னால் மக்கள் ஏற்பார்கள். ஆனால், அதை சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்க வேண்டுமே?.