முல்லைத்தீவு, சிலாவத்தை, தெற்கு தியோகு நகர் கடற்கரையை ஆக்கிரமித்துள்ள தனிநபர் ஒருவர் அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் சுமார் 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் செயற்படுகிறார் என்று அந்தப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முல்லைத்தீவு நகரில் இருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது தியோகுநகர். அங்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கரைவலை வளைப்பது, வீச்சு, மட்டி, போன்ற தொழில் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கரைவலை வளைப்பதற்கு கரையில் இருந்து ஏராளமான நிலப்பரப்பு வேண்டும். தனிநபர் ஒருவரை கடற்கடையை அண்டி 4 முதல் 5 கிலோமீற்றர் நீளத்துக்கு கம்பி வலைகளை அடித்து மீனர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றார். கடற்கரையை சுற்றி கம்பிவலையால் வேலி அடைத்துள்ள அவர் தனது எல்லைக்குட்டப்பட பகுதியில் கனடா நாட்டுக் கொடியையும் பறக்கவிட்டுள்ளார்.
அங்கு கரைவலைத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனால் பேசப்பட்டது. அது தொடர்பில் அதிகாரிகளுடன் ரவிகரன் கடுமையாக முரண்பட்டிருந்தார். தற்போது அந்தக் கடற்கரைக்கு செல்ல மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
நேற்று மீனவர்களுக்கு கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. குழப்பமடைந்த மீனவர்கள் அங்கு முரண்பாட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அங்கு சென்ற ரவிகரன் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இந்த விடயத்தில் தன்னாலான அழுத்தங்களைப் பிரயோகித்து தீர்வைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தியோகு நகர் கடற்தொழிலாளர் சங்கத்தினரைத் தொடர்பு கொண்டோம்.
“கரைவலை வளைப்பதற்கு இடமில்லாது செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுடைய வாழ்வாதாரம் அந்தரத்தில் உள்ளது. தற்போது வீச்சுத் தொழிலுக்கு, மட்டி தொழிலுக்கு மீனவர்கள் செல்லும் போது மாடு சாய்ப்பது போன்று 4 மோட்டார் சைக்கிள்களில் அடித்துக் கலைக்கின்றனர் அந்த நபரின் அடியாள்கள்.
நாம் கடற்கரைக்குச் செல்லமுடியாதவாறு எம்மைக் கட்டுப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை உடன் முன்னெடுக்க வேண்டும்.”என்று அவர்கள் தெரிவித்தனர்.