கடந்தகாலத்தில் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பின்வாசல் வழியாக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்படும் சதி முயற்சியே, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மையான திட்டம்” என ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விசேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,
இப்போது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மையான நோக்கம் ஜனாதிபதியும், சபாநாயகரையும் இலக்கு வைத்து நடத்தப்படும் சதித்திட்டமே.
அதாவது ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றிவிட்டு, தங்களுக்கு சாதகமாக செயற்படும் பிரதமர் ஒருவரை நியமித்து ஜனாதிபதியையும் மாற்றி அடுத்த தேர்தலை குறிவைத்து நகர்த்தப்படும் செயலாகவே இது நோக்கப்படல் வேண்டும்.
அதேபோன்று ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர் பின்வாசல் வழியாக பிரதமர் பதவியில் அமர்ந்து, இழந்த தங்கள் அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இவ்வாறான சதி முயற்சிகள் எப்போதும் நிறைவேறாது என்பதனையும் நான் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன் எனவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.