முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய 2009ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் எதிரிகள், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதியால் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்தன் கந்தவனம் கோகுல்நாதன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக, வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் 13 சாட்சியங்களை அரச சாட்சிகளாக குறிப்பிட்டு 2009ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவிலும், தியத்தலாவ இராணுவ முகாமிலும் மேற்குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றில் முதலாம் எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியதையடுத்து, அரச சட்டத்தரணியால் எதிரிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்கவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் மெய்ப்பாதுகாவலர்களை அழைத்து சாட்சியங்களை நெறிப்படுத்தி அரச தரப்பு சட்டத்தரணி வழக்கை நிறைவு செய்துள்ளார்.
அதன் பின்னர் இவ்வழக்கின் எதிரிகள் தரப்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில்,
எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதென இந்த வழக்கில் எதிரிக்கு, எதிரான சான்றாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதெனினும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக எந்தவிதமான சுயாதீன சான்றுகளையும் அரச தரப்பு முன்வைக்கவில்லை.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எதிரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் எதிரிகள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்றோ அல்லது இருவருக்கும் இடையே சதி செய்வதற்கு எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ உடன்பாடு இருந்ததென்றோ எந்தவிதமான சான்றுகளையும் அரச தரப்பு நிரூபிக்கவில்லை.
எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் பொலிசார் எந்தவிதமான விசாரணைகளையும் மேற்கொண்டதற்கான சான்றுகள் நீதிமன்றின் முன்கொண்டு வரப்படவும் இல்லையென்பதுடன் எந்த விசாரணை அதிகாரிகளும் சாட்சியம் அளிக்கவும் இல்லை என்பதை இந்த நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் எதிரிகளின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு எதிரிகளை விடுதலை செய்ய வேண்டும் என தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அரச தரப்பினதும், எதிரிகள் தரப்பினதும் வாத பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேயகோன் இற்றைய தினம் தனது தீர்ப்பில் எதிரிதரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு பிரமுகர்களை கொலை செய்ய எதிரிகள் சதித்திட்டம் தீட்டியதாக அரச தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியுள்ளமையால் எதிரிகளை விடுதலை செய்துள்ளார்.
அரச தரப்பில் அரச சட்டத்தரணி நயனா செனவிரத்னவும் எதிரி தரப்பில் சட்டத்தரணி செல்வி தர்மராஜா, தர்மராஜாவின், அணுசரணையில் சிரேஸ்ட்ட சட்டத்தரணி கே.வி தவராசா ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.