இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை கைப்பற்ற இளம் வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனியின் ஆலோசனை அவசியம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டி-20 (2007), 50 ஓவர் (2011), மினி உலகக்கோப்பை (2013) என மூன்று விதமான உலகக்கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் கடந்த 2011ல் இந்திய அணி தோனி தலைமையில் வென்ற உலகக்கோப்பையில், 2015ல் (ஆஸ்திரேலியா) தக்கவைக்க தவறியது.
இதனால், இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு மாற்றி மாற்றி வாய்ப்பு அளிக்கப்பட்டு, உலகக்கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இளம் இந்திய அணி சாதிக்க, தோனியின் தயவு தேவை என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறுகையில்,’ உலகக்கோப்பையில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு தோனி போன்ற சீனியர் வீரர் இருப்பது சிறப்பான விஷயம். இளைஞராக 2003ல் உலகக்கோப்பை தொடரில் கங்குலி, சச்சின், டிராவிட், கும்ளே உள்ளிட்ட வீரர்கள் இருந்த அணியில் இருந்தேன். அது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என எனக்கு தெரியும். அதனால் தான் தோனி, தற்போதைய அணிக்கு தேவை என கருதுகிறேன்.’ என்றார்.