இன்றைய காலத்தில் எந்த நோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்று கூற முடியாது. நோய்கள் சாதாரண மக்களை மட்டும் தான் தாக்கும் என்றில்லை. எப்பேற்பட்ட பிரபலங்களும் பல கடுமையான நோய்களால் அவஸ்தைப்படக்கூடும். பிரபலங்கள் திரைகளில் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் சொந்த வாழ்க்கை என்று வரும் போது, அவர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகள் என்னவென்றே நமக்குத் தெரியாது. மேலும் அப்பிரச்சனைகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் தெரியாது.
இந்திய பிரபலங்களுள் பலர் பல்வேறு கொடிய நோய்களை எதிர்கொண்டதோடு, அந்நோய்களில் இருந்தும் மீண்டு வந்துள்ளனர். அந்த பிரபலங்கள் யார், எந்த மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
மனீஷா கொய்ராலா: கருப்பை புற்றுநோய்
2012 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி, மனீஷா கொய்ராலாவிற்கு கருப்பை புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததாக அறிக்கை ஒன்று வெளிவந்தது. டிசம்பர் 10 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிக்கையானது வெற்றிகரமாக முடிந்தது. பாலிவுட் பிரபலமாக மனீஷா கொய்ராலா தன் வாழ்நாள் இப்படியொரு புற்றுநோயை எதிர்கொண்டு, தற்போது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளார்.
யுவராஜ் சிங் : நிலை 1 புற்றுநோய்
2011 ஆம் ஆண்டு உலக கோப்பை விளையாடும் போது, சிறந்த வீரர் விருதைப் பெற்ற யுவராஜ் சிங் இரத்த வாந்தி, குமட்டல் மற்றும் சுவாச பிரச்சனைகளை சந்தித்தார். உலக கோப்பை போட்டிக்குப் பிறகு, அவர் பரிசோதனை செய்து கொண்டதில், அவரது இடது நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. பின் அமெரிக்காவில் ஹீமோதெரபி சிகிச்சையின் மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டன. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிற்கு திரும்பிய யுவராஜ் சிங், 2012 ஆம் ஆண்டு நடந்த T20 உலக கோப்பையில் பங்கு கொண்டார்.
லிசா ரே: புற்றுநோய்
மிகவும் பிரபலமான நடிகையும், மாடலுமான லிசா ரேவிற்கு மல்டிபிள் மைலோமா என்னும் ஒருவகை புற்றுநோய் இருப்பது ஜூன் 2009 ஆம் ஆண்டு 23 ஆம் தேதி செய்தி வெளிவந்தது. இந்த புற்றுநோயானது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களைத் தாக்குவதால் ஏற்படும் ஒரு வகை அரிய நோயாகும். ஏப்ரல் 2010-இல், லிசா ரே தான் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டதாகவும், ஆனால் முழுமையாக குணமாகவில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் முழுமையாக சரிசெய்ய முடியாது.
அமிதாப் பச்சன்: மண்ணீரல் முறிவு & மியாஸ்டெனியா கிராவிஸ்
1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கூலி திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில், அமிதாப் பச்சன் நிறைய இரத்தத்தை இழந்தார். மருத்துவமனை சென்று பரிசோதித்ததில், இவருக்கு மண்ணீரல் முறிவு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்று வந்தது. அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்கள் கழித்து முற்றிலும் குணமாகிவிட்டதாக கூறி, மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
1984 ஆம் ஆண்டு, அமிதாப் பச்சனை சோதனை செய்த போது, அவருக்கு மியாஸ்டெனியா கிராவிஸ் என்னும் உடல் மற்றும் மனதளவில் பலவீனமாகி, இதனால் அவர் மன இறுக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இருப்பினும் அதிலிருந்து மீண்டுவிட்டார்.
சயிப் அலிகான்: மாரடைப்பு
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சயிப் அலிகான் நெஞ்சு வலி காரணமாக லீலாவதி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் இவருக்கு மைனர் ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக உறுதி செய்தனர்.
ஹ்ரித்திக் ரோஷன்: மூளையில் கட்டி
கிரிஷ் திரைப்பட ஹீரோவான ஹ்ரித்திக் ரோஷனுக்கு 2013 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. ஒரு மாதம் கழித்து கிரிஷ் 3 திரைப்பட வெளியீட்டின் போது, தான் முற்றிலும் குணமாகிவிட்டதாகவும், என் மூளையில் துளை இருந்தாலும், எனது ஸ்பிரிட் சற்றும் குறையவில்லை என்றும் ஹ்ரித்திக் கூறினார்.
மும்தாஜ்: மார்பக புற்றுநோய்
பழம்பெரும் நடிகையான மும்தாஜ் 2002 ஆம் ஆண்டு இவரது 54 வயதில் மார்பக புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. 6 ஹீமோதெரபி மற்றும் 35 கதிரியக்கத்திற்குப் பின், இவர் பெங்களுரு டைம்ஸில், “நான் அவ்வளவு எளிதில் போகமாட்டேன். மரணம் கூட என்னுடன் சண்டையிட வேண்டும்.” என்று கூறியிருந்தார். மேலும் இவர் என்ன தான் வயதாகிவிட்டாலும், தனது உடலமைப்பை சிறப்பாக பராமரித்து, இன்னும் தனது அழகைப் பராமரித்து வருகிறார்.
ரஜினிகாந்த்: மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வைரல் காய்ச்சல்
தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தி அவர்கள் 2011 ஆம் ஆண்டு, அவரது 61 வயதில் ICU-வில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் மிகுதியான சோர்வால் அவஸ்தைப்பட்டார் மற்றும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் தனது படத்தில் வில்லன்களை ஒதுக்கித் தள்ளியது போல், தனது உடல்நல பிரச்சனைகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டார்.
ஷாருக்கான்: 8 அறுவை சிகிச்சைகள்
கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்களை கிங் ஆப் சர்ஜரி என்றும் அழைக்கலாம். ஏனெனில் இவர் 25 வருடத்தில் விலா எலும்புகள், கணுக்கால், முழங்கால், கழுத்து, கண் மற்றும் தோள்பட்டை போன்ற பகுதியில் 8 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இவ்வளவு அறுவை சிகிச்சைகளை செய்த பின்பும், ஷாருக்கான் சற்றும் தளர்வடையாமல் இன்னும் குதூகலமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சல்மான் கான்: முப்பெருநரம்பு பிரச்சனை
2011 இல் சல்மார் கான் அவர்களுக்கு முகம் மற்றும் தாடைப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் பரிசோதனை செய்ததில், அவருக்கு முப்பெருநரம்பு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை பிரச்சனையானது தாங்க முடியாத வலியைத் தரக்கூடியது. இந்த ஒரு பிரச்சனையாலேயே சல்மான் கான் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இருந்தாலும் இன்னும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தான் வருகிறார்.