கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் நுழைந்து அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நியோமல் ரங்கஜீக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட நியோமல் ரங்கஜீவ இன்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுதம் தரித்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை நேரடியாகப் பார்த்த ஒரேயொரு சாட்சியாளரான சுதேஷ் நந்திமால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்வதற்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பொலிஸ் பரிசோதகரான ரங்கஜீவ மனுத்தாக்கல் செய்திருந்தார்.
எனினும் அந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்ட அதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த வேளையில் ரங்கஜீவ கைது செய்யப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகள் படுகொலையின்போது சில கைதிகளின் பெயர்களையும், அவர்களது அடையாளங்களையும் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ கூறியதாக வழக்கு விசாரணையின்போது சாட்சியமளிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த வருடத்தில் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து பாதாள உலகக் குழுவினரது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.