கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இவர்கள் இருவரையும் எதிர்வரும் இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பிரதேசத்தில் பெரும்பான்மையித்தைச் சேர்ந்த ஒருவரை முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று படுகொலை செய்ததைத் தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி திகன, கட்டுகஸ்தோட்டை, அக்குறனை மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
இதன்போது வீடுகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 46 வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு 4 மதஸ்தலங்களும் சேதப்படுத்தப்பட்டன.
கலவரத்தின்போது இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர்வரை காயமடைந்தனர்.
மேலும் கலவரத்திலும், தாக்குதல்களிலும் ஈடுபட்ட சந்தேகத்தில் 146 பேர்வரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அதேவேளை, தொடர்ந்தும் 4 தினங்களாக பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த பெரேரா எனப்படும் அரலிய சமந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினராவார்.