ரஷ்யாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிவரும் 4 அதிகாரிகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய உளவு பிரிவில் பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் மீது பிரித்தானியாவில் வைத்து அண்மையில் இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவர் சில ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவிடம் காட்டி கொடுத்தமைக்கான கடந்த 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2010ஆம் ஆண்டு அவருக்கு பிரித்தானிய அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில், அண்மையில், செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் ஆகியோர் மீது இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் ரஷ்யாவே இருப்பதாக பிரித்தானிய பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு கண்டனம் வெளியிட்டிருந்தன. அத்துடன், தமது நாடுகளில் பணியாற்றும் ரஷ்ய நாட்டு அதிகாரிகளையும் வெளியேற்றியிருந்தன.
இந்நிலையில், கனடாவும் அந்நாட்டில் பணியாற்றி வந்த 7 ரஷ்ய நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ரஷ்யாவில் பணியாற்றி வரும் கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் நால்வரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.